Sunday, 12 July 2015

சக்தி வாய்ந்த சரபரபேஸ்வரரை வணங்குவதால் ஏற்றபடும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்!!!!




சக்தி வாய்ந்த சரபரபேஸ்வரரை வணங்குவதால் ஏற்றபடும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்!!!!

உருவக் காரணம்

இரணியன் எனும் அசுரனைக் கொன்ற பின் நரசிம்மருக்குக் கோபம் தணியாமல் இருந்தது. அதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டிக் கொண்டார்கள்.

அவர்களை காக்க சிவன் எடுத்த அவதாரமே சரேபேஸ்வர வடிவமாகும்.


நரசிம்ஹ அவதாரத்தில் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.






அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.
இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர்

தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.












இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்'' என்றும் "சாலுவேஸ்வரன்'' என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.

இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங் கிரா, மற்றும் சூலினி. 

இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.

காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.

லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள்

இவரைக் "கலியுக வரதன்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

"நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி'' என்றும் குறிப்பிடுகின்றனர்.

பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.

இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில்  தனிச் சன்னதி  உள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.







இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை, சூறாவளி, ஆழிப்பேரழிவும், தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள் மற்றும் மனோ வியாதிகள், தொடர்ந்து வந்து உறுத்தும் ஊழ்வினையின் காரணமாக பரிகாரமே காணமுடியாது என்று தீராத துன்பம் தர முயலும் கொடிய தரித்திரங்களும் சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஓடிவிடும்.
எதிரிகள் குலநாசம், பில்லி, சூனிய ஒழிப்பு, மரண பயம் அகலுதல், நீடித்த ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது.
சரபரின் சக்திகளான பிரத்தியங்கராவும், சூலினியும் பில்லி சூனியம், ஏவல், பூதப்பிரேத, பிசாச பயங்களை அழித்தொழிக்கும் வல்லமை பெற்றவை.
கால பைரவ சக்தியான அதர்வணப் பிரத்தியங்கிரா தேவி. இவள் சிவ துவேஷங்களில் ஈடுபடுகிறவர்களை அழிக்கும் சக்தியாக விளங்குவதால் இவளைத் தியானிக்கும் எவரையும் யாருடைய துவேஷமும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறுவதுண்டு..
சரபரின் இன்னொரு சக்தியான சூலினி தேவி துர்க்கையின் அம்சமாக விளங்குவதால் இவளை வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடைகளும், தரித்திரங்களும், எதிரியின் தடைகளில் உண்டான துக்கங்களும் விலகும். மிருத்யுவை நாசம் செய்து நலம் செய்பவள் சூலினி என்று வேதங்களில் கூறப்படுகின்றது. ஆகவே காரியத் தடைகள் அகல சூலினி தேவியை வழிபடுதல் வேண்டும்.
துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட சரபேஸ்வரர் ஸ்லோகம்

ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய

ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய 

இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்

Video Link

2 comments:

  1. Nice presentation with proper and apt references. good going indeed.Look forward for more interesting topics.

    ReplyDelete